தனியார் துறை இடஒதுக்கீடு.. சட்டம் தேவை - ராமதாஸ்

தனியார் துறை இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Private Sector

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இந்தியாவில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டாலும், அரசுத்துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால், வேலை கிடைக்க வாய்ப்பில்லை என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார். இட ஒதுக்கீட்டால் பயனில்லை என்னும் தொனியில் அமைச்சர் கூறியுள்ள இக்கருத்து சமூக நீதியின் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.

மராட்டியத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி மராத்தா சமுதாயத்தினர் போராட்டம் நடத்தி வருவது குறித்து கருத்து தெரிவித்த நிதின் கட்கரி, ‘‘அரசுத் துறைகளில் வேலைக்கு ஆள் எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் காரணமாக வங்கிகளில் வேலைவாய்ப்பு குறைந்து விட்டது. இத்தகைய நிலையில் இட ஒதுக்கீடு வழங்கினால் கூட எங்கிருந்து அரசு வேலை கிடைக்கும்?என்று கேட்டிருக்கிறார்.

அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு என்பது இல்லாமல் இல்லை. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் தெரிவித்த தகவல்களின்படி மத்திய, மாநில அரசுத் துறைகளில் 24 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகக் கிடக்கின்றன. அவற்றை உடனடியாக நிரப்பினால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சமூகநீதி வழங்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் இட ஒதுக்கீட்டால் பயனில்லை என்று பேசுவது முறையல்ல.

அதேநேரத்தில் அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகள் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது குறைந்திருப்பது உண்மை தான். ஆனால், வேலைவாய்ப்பு குறைந்திருப்பதால் சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எவ்வாறு சரி செய்வது என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, வேலைவாய்ப்பு குறைந்து விட்ட நிலையில், இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற முடிவுக்கு வருவது ஆபத்தானதாகும்.

1991&ஆம் ஆண்டில் தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே அரசு வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் அரசுத்துறை வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, தனியார் துறையில் அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்புகளின் அளவு சிறு துளியாகவே இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலை மாறிவிட்டது.

இன்றைய நிலையில் இந்தியா முழுவதும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை ஒன்றரை கோடி ஆகும். ஆனால், வருங்கால வைப்புத் தொகை, மருத்துவ வசதி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புடன் கூடிய தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை 6 கோடி ஆகும். அதாவது அரசு வேலைவாய்ப்புகளை விட தனியார் துறை வேலைவாய்ப்புகள் 4 மடங்கு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Ramadoss

ஆனால், தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லாததால் வளம் படைத்தவர்களும், செல்வாக்கு படைத்தவர்களும் தான் அதிக ஊதியம் கொண்ட தனியார் துறை வேலைவாய்ப்புகளை பெறுகின்றனர். என்ன தான் படித்திருந்தாலும், தகுதியும், திறமையும் இருந்தாலும் அடித்தட்டு மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் உயர்பதவிகள் கிடைப்பதில்லை.

அலுவலக உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் போன்ற சில பணிகளுக்கு மட்டுமே பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையை மாற்றி தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உயர்பதவிகள் கிடைக்க வேண்டும் என்றால், தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது மட்டும் தான் இப்போதுள்ள நிலையில் ஒரே ஒரு தீர்வு ஆகும்.

இதைக் கருத்தில் கொண்டு தான் தனியார்துறை பெருநிறுவனங்களில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வர வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தலால் இதுகுறித்த விவாதம் எழுந்தது.

அப்போது சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக இருந்த மீராகுமார் அம்மையார் அவர்களின் ஏற்பாட்டில் பல்வேறு கலந்தாய்வுகள் நடந்தன. ஆனால், தனியார் துறையில் இட ஒதுக்கீடு தேவை என்பதை ஒப்புக்கொண்ட மத்திய அரசு, இதற்காக சட்டம் இயற்ற வாய்ப்பில்லை என்றும், தனியார் நிறுவனங்களே தாங்களாக முன்வந்து இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்றும் கூறி விலகிக் கொண்டது. அதன்பின் இதுகுறித்த விவாதங்கள் எழவில்லை.

இட ஒதுக்கீட்டால் மக்கள் பயனடையும் அளவுக்கு அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகள் இல்லை என மத்திய அமைச்சர் நிதின்கட்கரியே கூறியுள்ள நிலையில், தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். இதற்கான சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு சட்ட அங்கீகாரத்துடன் கூடிய தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விரைவில் அமைக்கப்பட்டவுடன் அதன் மூலமாக இந்த கோரிக்கையை வலியுறுத்த பாமக நடவடிக்கை எடுக்கும்." என உறுதி அளித்துள்ளார்.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

Most Read News

Tag Clouds